பல்லடம் சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இன்னும் முறையான துப்பு கிடைக்காமல் தமிழக போலீஸாரின் 14 தனிப்படைகளும் திணறும் சூழல் உள்ளது. சுமார் 14 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் கொள்ளையுடன் நடந்த கொலைச் சம்பவங்களின் குற்றவாளிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த குற்றவாளிகளில் பாவரியா எனும் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த வட இந்தியர்களும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒருமுறை நடைபெற்ற கொலைகளுடனான தொடர் கொள்ளைகளில் பாவரியா குற்றவாளிகள் முதன்முறையாக அடிபட்டனர். இவர்களை பிடிக்க அப்போதைய டிஐஜி ஜாங்கிட் நடத்திய தேடுதல் வேட்டை, ‘தீரன்’ எனும் பெயரில் படமாகி பிரபலமானது. ஜாங்கிட் மேற்கொண்ட கைதுகளுக்கு வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளும் முக்கியப் பங்காற்றி இருந்தனர்.
இந்நிலையில், அதே பாவரியா சமூகத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் களம் காணத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், பல்லடம் கொலைகளில் கையாளப்பட்ட சில முறைகள் பாவரியா குற்றவாளிகளுக்கானது. குறிப்பாக அவர்கள் ஒருவரை கொலை செய்ய கையில் கிடைக்கும் மரம் உள்ளிட்டவற்றை ஆயுதமாக்கி நடுமண்டையில் முழுசக்தியுடன் அடிப்பது உண்டு. இதுவும் தங்கள் சாங்கியத்தின் அடிப்படையில் 6 முறை மட்டுமே அடிப்பார்கள் என்ற கருத்து உள்ளது. ராஜபுதனர்கள் உள்ளிட்ட அக்கால அரசர்களுக்கு போர்களிலும் உதவிய இவர்கள் இயற்கையிலேயே குரூரக் குணம் படைத்தவர்களாம்.
ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பாவரியாக்கள் அதிகம் வசிக்கின்றனர். குஜராத், டெல்லி, ம.பி., உத்தராகண்டிலும் இவர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒரே பெயரில் அல்லாமல் பாப்ரி, பவுரியா, பவாரி, பாட்டி, நாரிபட் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். ஆனால் தாங்கள் எளிதில் சிக்கிவிடும் அபாயத்தை தவிர்க்க இவர்கள் வட மாநிலங்களில் அதிகமாக கொள்ளையடிப்பதில்லை. இந்த பாவரியாக்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல. இவர்களில் மனம் திருந்தி விவசாயம் செய்து பிழைப்பவர்களும் உள்ளனர்.
பல்லடம் சம்பவத்தில் பாவரியா குற்றவாளிகளுக்கான தொடர்பை தமிழ்நாடு காவல்துறை ஆய்வு செய்து முதலில் உறுதிசெய்ய வேண்டும். இதன் பிறகு பாவரியாக்கள் வாழும் பகுதியிலுள்ள காவல் அதிகாரிகளான தமிழர்களை தொடர்புகொண்டால், கூடுதல் தகவல்களுடன் கைதுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.