வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம் இயற்றப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்தது. இதை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள் ஹரியானாவின் ஷம்பு எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் கடந்த வாரம் பேரணியாக செல்ல முயன்றனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை தடுத்தனர். இதில்,15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில்,அரியானா, பஞ்சாப் எல்லையான ஷம்புவில் இருந்து ஒருங்கிணைந்த விவசாயிகள் அமைப்பை சேர்ந்த 101 பேர் டெல்லி நோக்கி நேற்று பேரணி செல்ல இருந்தனர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி விவசாயிகள் பேரணியாக செல்ல முற்பட்ட போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஷம்பு எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. போலீசார் நடத்திய கண்ணீர் புகை குண்டு வீச்சில் 9 விவசாயிகள் படுகாயமடைந்தனர் என்றும் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வன் சிங் பாந்தர்தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் பேரணி நேற்று மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.