காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மே 2014ல், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.20 ஆகவும், டீசலுக்கு ரூ.3.46 ஆகவும் இருந்தது. மோடி அரசாங்கத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி தற்போது ரூ.19.90 ஆகவும், டீசலுக்கு ரூ.15.80 ஆகவும் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறை மூலம் ஒன்றிய அரசு ரூ.39.54 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளது. ஆனால் மக்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கவில்லை.
மே 2014ல், கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. இன்று அது 65.31 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. 40% மலிவாகி விட்டது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட தற்போது அதிகமாக உள்ளன. கலால் வரி உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் கொள்கைகளால் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன.
ஆனால் சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை சுமக்கின்றனர். இது வெளிப்படையான பொருளாதார சுரண்டல். எனவே, அரசின் கொள்கைகள், தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வாறு பயனளித்தன என்பதை சிஏஜி தணிக்கை செய்ய வேண்டும். இதில் கூட்டு சதி நடந்திருக்கிறதா என்பதை ஊழல் கண்காணிப்பு அமைப்பும் சிபிஐயும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.