அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். போலீஸ் உடனான துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.
‘இது தீவிரவாத சதி செயலாக இருக்குமா?’ என்ற கோணத்தில் குறித்து எஃப்பிஐ (FBI) விசாரணையை தொடங்கி உள்ளது. அங்குள்ள போர்பன் தெருவில் புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க நேரப்படி அதிகாலை 3.15 இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் வெடிபொருள் ஏதேனும் உள்ளதா என புலனாய்வு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதை எஃப்பிஐ அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
இது பயங்கரவாத தாக்குதல் என நியூ ஆர்லியன்ஸ் மேயர் லாடோயா கான்ட்ரெல் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இது திட்டமிடப்பட்ட சதி என அந்த நகரத்தின் காவல் துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஓட்டுநரின் செயல்பாடு அவரது கொலைவெறி தாக்குதலின் நோக்கத்தை உறுதி செய்வதாக போலீஸ் கமிஷனர் ஆன் கிர்க்பாட்ரிக் தெரிவித்துள்ளார். மேலும், இயன்றவரை அதிகளவிலான மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் அவர் செயல்பட்டார் என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
நடைபாதையில் திரண்டிருந்த மக்கள் மீது டிரக் மோதியதையும், அதையடுத்து துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த 22 வயதான கெவின் கார்சியா தெரிவித்தார். வாகனம் மோதிய வேகத்தில் அவர் மீது ஒருவரின் உடல் வந்து விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
‘நான் இரவு விடுதியை விட்டு வெளியில் வந்தேன். அப்போது கூச்சலிட்ட படி மக்கள் பின்னோக்கி நகர்வதை கண்டேன். தொடர்ந்து எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். அப்போது அந்த வழியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, முதலுதவி சிகிச்சை பெற்றனர். சிலர் உயிரிழந்தும் இருந்தனர்” என சம்பவத்தை நேரில் பார்த்த டேவிஸ் என்பவர் அமெரிக்க ஊடக நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் 5 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன் வசம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகனத்தை கொண்டு மக்கள் மீது திட்டமிட்டு கொடூர தாக்குதல் மேற்கொள்ளும் சம்பவத்துக்கு இது உதாரணமாக அமைந்துள்ளது. கடந்த மாதம் ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட சந்தையில் சவுதியை சேர்ந்த மருத்துவர் வாகனத்தை இயக்கி இருந்தார். இதில் நான்கு பெண்கள் மற்றும் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.