பாட்னா: அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோரை கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிந்தது மற்றும் அதை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பாட்னா, காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஆதர்வாளர்கள் 150 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யதுள்ளனர்.
இந்த போராட்டம் சட்ட விரோதம் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே நேற்று பீகார் மாணவர்கள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகிய பெரிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வழிநடத்த வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று 5வது நாளை எட்டியுள்ள நிலையில் அவரை இன்று காலை பாட்னா போலீசார் கைது செய்தனர். வலுக்கட்டாயமாக போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என தேர்வாணைய பணியாளர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.