பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான ‘யர்லுங் இட்சாங்போ’ வழியாக அருணாசலபிரதேசத்தில் நுழைந்து, அசாம் மாநிலத்தில் ஓடுகிறது. பின்னர் தெற்கு நோக்கி பாய்ந்து வங்கதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த நதியின் சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர்.
2015ம் ஆண்டில் திபெத்தில் உள்ள மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. தற்போது 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்திரா அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
சீனா அணை கட்டிவிட்டால் பிரம்மபுத்திரா நதி மீது சீனாவுக்கு அதிகாரம் வந்துவிடும். மேலும் எல்லைப் பகுதிகளில் இருந்து பெரிய அளவில் தண்ணீரை திறந்து இந்தியாவுக்குள் விடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அணை கட்டுவதால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது. அதே சமயம் அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே இந்தியாவும் அணை கட்டுகிறது.
இந்த கருத்தை மீறி நேற்று சீனா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,’ திபெத் பகுதியில் ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் பற்றிய கவலைகளை புறந்தள்ளிவிட்டு பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டப்பட உள்ள நீர்மின் திட்டம் பாதுகாப்பானது. அந்த அணை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. விரிவான புவியியல் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம், திட்டத்திற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் நிலப்பரப்பில் அதிக மழை பெய்யும் ஒரு பகுதியில் இந்த அணை கட்டப்படும்.
ஏனெனில் 50 கிமீ தூரத்திற்கு மேல் 2,000 மீட்டர் செங்குத்து நீர் வீழ்ச்சியை பிரம்மபுத்திரா ஆறு சீன பகுதியில் கொண்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 70 மில்லியன் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்காக நதியின் நீர் மின் ஆற்றலைப் பயன்படுத்த, நாம்சா பர்வா மலை வழியாக 20 கிமீ நீளமுள்ள 6 சுரங்கங்கள் அமைத்து நதியின் ஓட்டத்தின் பாதியை நொடிக்கு சுமார் 2,000 கன மீட்டர் என்று திருப்பிவிட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.
இந்த நீர்மின் திட்டம் அமைந்தால் அது, திபெத் பகுதிக்கு ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித்தரும். இத்திட்டம் நிறைவேறியதும், மின்சாரம், நீர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆகிய உள்கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தும். இது திபெத்துக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான வளர்ச்சியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த திட்டத்தால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது.