மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி மகாயுதி கூட்டணியின் புதிய அரசு பதவியேற்கும் என்று பாஜ மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே உறுதி செய்துள்ளார். ஆனாலும், யார் புதிய முதல்வர் என்கிற குழப்பம் இதுவரையிலும் தீரவில்லை. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜ, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் குழப்பம் தீராத நிலையில், மும்பையில் பாஜ மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே நேற்று அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியின் புதிய அரசு வரும் 5ம் தேதி பதவியேற்கும். பதவியேற்பு விழா தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடக்கும். இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்’’ என்றார். பட்நவிஸ், முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பாஜ கட்சியினர் கூறுகின்றனர்.
பதவியேற்புக்கு முன்பாக பாஜ சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை (டிச.2ம் தேதி) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாயுதி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்ட நிலையில், காபந்து முதல்வர் ஷிண்டே அவரது சொந்த கிராமமான சதாராவுக்கு திடீரென புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உடல் நிலை சரியில்லாததால் சொந்த கிராமத்தில் ஷிண்டே வுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன.