புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், ரூபாய் மதிப்பு பலவீனமடைவதாக கூறப்படும் விமர்சனங்களை ஏற்க முடியாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறி உள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தினந்தோறும் வரலாறு காணாத சரிவை கண்டு வருகிறது. தற்போது ஒரு டாலருக்கு ரூ.86.59 ஆக இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

நிர்மலா சீதாராமன் - தமிழ் விக்கிப்பீடியா

இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: கடந்த சில மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவீதம் சரிந்துள்ளது கவலைக்குரிய விஷயம். ஏனெனில் இது இறக்குமதி செலவை அதிகப்படுத்துகிறது. ஆனால், ‘ஐயோ ரூபாய் பலவீனமடைகிறது’ என்கிற விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அமெரிக்க டாலாரை தவிர வேறெந்த நாட்டு கரன்சிக்கு எதிராகவும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை.

மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்திக்கவில்லை.
நமது மைக்ரோ பொருளாதார அடித்தளம் (தனிநபர்கள், நிறுவனங்களின் செயல்பாடு, பொருட்கள், சேவைகளின் தேவை, விநியோகம் உள்ளிட்டவை) வலுவாக உள்ளன. அது பலவீனமாக இல்லை என்றால், அனைத்து கரன்சிக்கு எதிராகவும் இந்திய ரூபாய் மதிப்பு நிலையானதாக இருக்க முடியாது.

ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் ஏற்ற இறக்கத்தை சந்திக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வழிகளை ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது. நாங்கள் அனைவரும் நிலைமையை உன்னிப்பாக கவனிக்கிறோம். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *