சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம், ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் புனித அன்னாள் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்; மிக, மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் முன்னேற்றம், எதிர்காலத்துக்கு முதல்வராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி.
பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகள் பசியை போக்க உருவாக்கிய திட்டம்தான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஒரு குழந்தை கூட பள்ளிக்கு பசியுடன் வரக்கூடாது என்று முடிவு எடுத்து திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் காலை உணவு திட்டம் நம்மை பின்பற்றி தொடங்கி உள்ளன. அண்ணா பிறந்தநாளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு காமராஜர் பிறந்தநாளில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தோம்.
அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது. சங்க இலக்கியத்தில் பசிப் பிணி போக்குவது குறித்து பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள்தான் எதிர்காலத்தின் சொத்து என்பதால் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
பசிப்பிணியை போக்கும் பணி அரசுக்கும் பொருந்தும். காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களை பார்த்து, பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது. உணவின் தரத்தில் ஒரு துளிக்கூட குறை இருக்க கூடாது என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர்; பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா? நீட் தேர்வை எதிர்த்து மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டின் வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது. மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் படிப்பதற்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதே எனது எண்ணம் என்று கூறினார்.