பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் தனது கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு அவமானம். ஓவல் அலுவலகத்தை அடையும்போது இந்த தகவலை அறிந்தோம். கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என நான் கருதுகிறேன். இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இது விரைவில் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல் மேற்கொண்ட உடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் மார்கோ ரூபியோவை தொடர்பு கொண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா மிகுந்த நிதானத்தைக் காட்டியுள்ளது.
25 இந்தியர்களும், ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.