பெங்களூரு: ஒன்றிய அரசின் பாரபட்சமான வரிப்பகிர்வு குறித்து விவாதிக்க தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
15வது நிதி கமிஷன் அறிக்கையின் படி ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வில் அதிகப்படியான இழப்புகளை சந்தித்த மாநிலங்களில் கர்நாடகாவுக்கு ஒன்றாகும். 14வது நிதி ஆணையத்தின் கீழ் அம்மாநிலம் 4.7% பங்கு பெற்றிருந்த நிலையில், 15வது நிதி ஆணையத்தின் கீழ் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டு 3.647% ஆக உள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்; தனிநபர் மாநில உள்நாட்டு உற்பத்தியை அதிகமாக கொண்ட மாநிலங்கள், அவற்றின் பொருளாதார செயல்பாடுகள் சிறப்பாக உள்ள போதிலும் ஒன்றிய அரசிடம் இருந்த மிக குறைந்த வரியே பகிர்ந்து அளிக்கப்படுவதாக கூறியுள்ளார். எனினும் மாநாடு எங்கு, எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுவதாக தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வாரும் நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிதி ஆய்வு கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார்.