சென்னை: குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 23 வகையான பணிகளில் மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 15.88 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே தான் குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று சமீபத்தில் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதாவது கூடுதலாக 480 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 2,208 காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை என்பது 8,932 என்ற அளவில் உயர்ந்துள்ளது. அதன்பிறகு 3வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று கூடுதலாக 41 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4ல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை என்பது 9,532 ஆக அதிகரித்துள்ளது.