லாஸ்ஏஞ்சல்ஸ்: 2025 ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறந்த நாட்டுப்புற ஆல்பமாக பேஒன்ஸின் கவ்பாய் கார்ட்டர் பாடல் தேர்வானது. அதிகபட்சமாக ‘நாட் லைக் ஆஸ் பாடல் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.
இதில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா டாண்டன் என்பவர் ‘த்ருவேனி’ என்ற பாடலுக்காக பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம் என்ற பிரிவில் விருது வென்றிருக்கிறார். பலரும் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “இசை என்பது காதல், இசை என்பது ஒளி, இசை என்பது சிரிப்பு. நாம் அனைவரும் அன்பு, ஒளி மற்றும் சிரிப்பால் எப்போதும் சூழப்பட்டிருப்போம்.
இசையை உருவாக்கும் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். 70 வயதுடைய சந்திரிகா டாண்டன் சென்னையைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள எம்சிசி கல்லூரியில் பயின்றிருக்கிறார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். பெர்க்லீ இசைக்கல்லூரியின் முதல்வருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.