மலேசியாவில் குழிக்குள் விழுந்த இந்திய பெண்ணை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணி கடினமானது என்பதால் தேடுதல் பணி முடிவடைவதாக மலேசிய அரசு அறிவித்தது.
ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த அணிமிகனிப்பள்ளியை சேர்ந்த விஜயலட்சுமி, தனது கணவர் மற்றும் மகனுடன் மலேசியாவில் வசித்து வந்தார். ஜாலான் மசூதியில் உள்ள மலாயன் மேன்ஷனுக்கு குடும்பத்துடன் நடந்து சென்றபோது, அவ்வழியில் அமைக்கப்பட்டிருந்த சிலாப்பின் குழியில் விஜயலட்சுமி தவறி விழுந்தார்.
கேமராக்கள் மற்றும் ரேடார்கள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எனினும், தொடர்ந்து 8 நாட்களாக விஜயலட்சுமியை மீட்புக் குழுவினர் தேடி வந்த நிலையில், கால்வாய் குழிக்குள் விழுந்த விஜயலட்சுமி மீட்க முடியவில்லை என்று மலேசிய அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘விஜயலட்சுமியை மீட்பதில் சிக்கல் உள்ளது. மீட்பவர்களின் உயிருக்கு கூட ஆபத்து இருப்பதாக கருதுகிறோம். கழிவுநீர் வாய்க்காலில் இருந்த தண்ணீரை வெளியேற்றி தேடினோம். ஆனால் விஜயலட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே எங்களது தேடும் பணியை முடித்துக் கொண்டோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.