தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களிடம் திமுகவிற்கு செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறி வருவது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. முதல்வர் அதற்கு விளக்கமளித்து விட்டார்.
கூட்டணி கட்சிகளுக்கு இடையிலே பிரச்னைகளின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படாது என்று முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் கூறியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழிமொழிகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடமே இல்லை என்கிறார்.
நம்முடைய ஆளுநர் ஆர்.என்.ரவியும் அதை விரும்புகிறார். ஆர்எஸ்எஸ் கட்சியும் அதை விரும்புகிறது. திமுகவை எதிர்க்கிறோம் என்கிற அடிப்படையிலே ஒட்டுமொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது குதர்க்கமான ஒரு வாதமாகத்தான் போய் முடியும், இனவாதமாகதான் போய் முடியும். மக்களை நாம் குழப்ப கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.