கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு அரசுப்பணி ஒப்பந்தத்தில் 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதை கண்டித்து பாஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி, Opposition parties  create ruckus in both houses of Parliament

இதனால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பாமல் தடுக்க, இந்த அமளி பாஜவின் மறைமுக திட்டத்தின் ஒரு பகுதி என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டின் ஸ்டோர் ரூமில் கடந்த 14ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு பாதி எரிந்த நிலையில் கோடிக்கணக்கான பணம் மூட்டை மூட்டையாக மீட்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் துறைசார் விசாரணையை நடத்தி வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும், உண்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனக் கோரி காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி மாநிலங்களவையில் நேற்று ஒத்திவைப்பு நோட்டீசை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், காலையில் அவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருப்பது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய விவகாரத்தை எழுப்பினார்.

இது குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘ஒரு முக்கியமான பிரச்னை எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அரசியலமைப்பு பதவி வகிக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர், முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற இருப்பதாக பேசி உள்ளார். மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது. அதற்காக அரசியலமைப்பை திருத்துவோம் என முக்கிய பொறுப்பில் இருப்பவரே கூறியிருப்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எங்கு சென்றாலும் அம்பேத்கரின் புகைப்படத்தை கொண்டு செல்பவர்கள், அரசியலமைப்பை மாற்றுவதைப் பேசுகிறார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரசின் திட்டம் என்ன? தீவிரமான இவ்விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி தலைவரும் அவையின் எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பதிலளிக்க வேண்டும்’’ என்றார்.

ஒன்றிய அமைச்சரும், பாஜ தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, ‘‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதிபடுத்த தேவைப்பட்டால் அரசியலமைப்பையும் திருத்துவோம் என கர்நாடகா துணை முதல்வர் பொது வெளியில் பேசி உள்ளார். அந்த கொள்கையை அவர் உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும், இது குறித்த விளக்கத்தையும் காங்கிரஸ் தலைவர் கார்கே தர வேண்டும்’’ என்றார். இதன் காரணமாக அவையில் கடும் அமளி ஏற்பட்டது. ஒன்றிய அமைச்சர்களுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

அப்போது பதிலளித்த கார்கே, ‘‘அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை யாரும் மாற்ற முடியாது. நாங்கள் அவ்வாறு செய்ய முடிவு செய்துள்ளோம் என யார் கூறியது? அரசியலமைப்பை பாதுகாக்க கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை மேற்கொண்டவர்கள் நாங்கள். அரசியலமைப்பை பாதுகாப்பவர்கள் நாங்கள். கர்நாடக அமைச்சர் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பேசவில்லை. அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்ற பேச்சு எதிர்பக்கத்தில் இருந்துதான் வந்தது’’ என்றார். தொடர்ந்து கார்கே பேச முயன்றாலும் பாஜ எம்பிக்கள் அவரை பேச விடாமல் கோஷமிட்டபடி இருந்தனர். பதிலுக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு குறித்து கர்நாடகா துணை முதல்வரும், கார்கேவும் பேசி இருக்கிறார்கள். இதை என்னால் நிரூபிக்க முடியும். ஏற்கனவே இதுபோன்ற கோரிக்கைகளை சர்தார் படேல் நிராகரித்துள்ளார்’’ என்றார்.

இதனால் அவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மக்களவை காலையில் கூடியதும், உபியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை கண்டித்து சமாஜ்வாடி எம்பிக்கள் பதாகைகளுடன் வந்தனர். இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா, விதிமுறை மீறக்கூடாது எனக்கூறி அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

பின்னர் அவை கூடியதும், மக்களவையிலும் கர்நாடகா விவகாரத்தை எழுப்பிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘இப்படிப்பட்ட பேச்சுக்களை இந்த அவை எப்படி வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியும்?’’ என்றார். டி.கே.சிவக்குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்தும் பாஜ எம்பிக்கள் கோஷமிட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘‘டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பக் கூடாது என்பதற்காகவே பாஜ முற்றிலும் பொய்யான ஒரு விவகாரத்தை கொண்டு வந்து அவையை முடக்கி உள்ளது’’ என்றார். மக்களவையில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு நிதி மசோதா மீதான விவாதம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *