சேலம்: சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்குவார்கள் என்பதால், 2 மாஜி அமைச்சர்களுக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியே கள ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கட்சிக்காரர்கள் அனைவரும் சிரமத்தில் தான் இருக்கிறீர்கள். அதனை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்ததும் உங்களை எல்லாம் டாப்புக்கு கொண்டு செல்வேன். ஏமாற்ற மாட்டேன். நம்மிடம் கூட்டணி இல்லையே என நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக்கொள்வேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நம்மை மதிக்காத காரணத்தினால் தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். மதியாதார் வாசலை மிதிக்க கூடாது என்பதற்காக கூட்டணி வைக்கவில்லை. வரும் தேர்தலில் சிறப்பான கூட்டணியை அமைப்போம். அதைப்பற்றி நீங்கள் யாரும் யோசிக்க வேண்டாம். அதனை நான் பார்த்துக்கொள்கிறேன். மகாராஷ்டிராவில் பாஜக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அதற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம். எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்து வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர். அதேபோல நாமும் வேலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பூத் கமிட்டி தான் மிகவும் முக்கியம். எனவே ஒவ்வொரு பூத் கமிட்டியையும் ஒரு கிளையாக அமைத்து செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த தேர்தலில் பாஜ மதிக்காத காரணத்தால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதால், இந்த முறை பாஜ உரிய மதிப்பளித்தால், அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைப்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.