நியூயார்க்: அமெரிக்காவில் மரணமடைந்த பிரபல தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் சான்பிரான்சிஸ்கோவில் அடக்கம் செய்யப்பட்டது. உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் நுரையீரல் பாதிப்பு காரணமாக அமெரிக்கா,சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காததால் கடந்த 16ம் தேதி அவர் காலமானார். புகழ்பெற்ற தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மகனான ஜாகிர் உசேன், தபேலா இசையில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்| Famous tabla musician Zakir Hussain passes away

ஜாஸ் மற்றும் மேற்கத்திய கிளாசிக்கல் உட்பட பாரம்பரிய இசையின் வரம்புகளுக்கு அப்பால் அதை எடுத்துச் சென்றார். மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்களில் ஒருவரான இவர், 60 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவர் தன்னுடைய வாழ்க்கையில் 4 கிராமி விருதுகளை பெற்றுள்ளார். பத்மஸ்ரீ,பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை இந்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பெர்ன்வுட் பகுதியில் ஜாகிர் உசேனின் உடல் அடக்கம் நடந்தது. இறுதி சடங்கில் ஒன்றிய அரசு சார்பில் இந்திய தூதர் ஸ்ரீகர் ரெட்டி கலந்து கொண்டார். ஜாகிர் உசேனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக டிரம்ஸ் சிவமணி தலைமையில் இசை கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *