சென்னை: முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் (நூற்றாண்டு விழா) விழா சென்னை திநகரில் நடைபெற்றது. சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் தலைமையில் நடக்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவின் போது, நல்லகண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து, திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை. நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்திருக்கிறேன். திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் நல்லகண்ணு. தகைசால் தமிழர் நல்லகண்ணு தனது கருத்துகளை ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தக்கூடியவர்.
எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களையும் தாண்டி வரும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்துள்ளது.இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, மதச்சார்பின்மை கூட்டணி நிரந்தர கூட்டணி ஆகும். ஏழு ஆண்டுகள் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.