சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியது. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, நள்ளிரவு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரைகளில் நண்பர்கள், உறவினர்களுடன் திரண்டதால் உற்சாகம் கரைபுரண்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. பழைய 2024ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, புத்தாண்டை பொதுமக்கள் கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் வாண வேடிக்கைகளுடன் கேக், இனிப்புகள் வழங்கி விடிய விடிய கொண்டாடி வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளுடன் நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், கேளிக்கை விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், பண்ணை வீடுகளில் மது விருந்துகளுடன், ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
புத்தாண்டை வரவேற்க தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்கிய கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நேற்று இரவு 8 மணி முதலே குவிந்தனர். இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மற்றும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மேற்பார்வையில் மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் நேற்று முதல் இன்று அதிகாலை வரை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.