சுராசந்த்பூர்: மணிப்பூரில் கடந்தாண்டு மே 3ம் தேதி ஏற்பட்ட இனக்கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது அமைதி நிலவினாலும் அவ்வப்போது இனக்கலவரங்கள் நீடித்து வருகிறது. மாநிலத்தில் இனக்கலவரங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை(டிச.31) மணிப்பூரின் காங்போங்பி மாவட்டம் சைபோல் கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும், குக்கி – சோ பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சில பெண்கள் தலையில் காயமடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து குக்கி – சோ பழங்குடியிர் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குக்கி – சோ பழங்குடி மக்கள் வசிக்கும் காங்போங்பி, தெங்னவுபால் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடி மக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 24 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்கள் வழியே வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.