ஒட்டவா: கட்சியிலும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் வலுப்பதால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார். கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2013ம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். சமீபகாலமாக உட்கட்சியிலும் மக்கள் மத்தியிலும் ட்ரூடோவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதி நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நேற்று இரவு பேட்டி அளித்த ட்ரூடோ, ‘‘கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அடுத்த தேர்தலில் நான் போட்டியிடவும் மாட்டேன். கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்’’ என்றார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை வரும் 24ம் தேதி வரை ஒத்திவைக்கவும் அவர் கவர்னர் ஜெனரலிடம் வலியுறுத்தி உள்ளார். அடுத்த தலைவர் குறித்து லிபரல் கட்சியின் தேசிய செயற்குழு கூடி முடிவு எடுக்கும். ஒருவேளை கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டால், முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கனடா அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. ட்ரூடோ பதவி விலகுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து கனடா டாலர் மதிப்பு நேற்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.