பெய்ஜிங்: திபெத், நேபாளத்தில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 129 பேர் பலியாகி உள்ளனர். டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஷிகாட்சேவில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் திரண்டனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் இதுவரை 129 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சீன நிலநடுக்க நிர்வாகம் இரண்டாவது நிலை அவசரகால எச்சரிக்கையை அறிவித்துள்ளது. ஜிசாங் தன்னாட்சி பிராந்தியமும் இரண்டாம் நிலை அவசரகால எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கம் குறித்து அறிந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.