சென்னை :அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சலுகை வழங்கி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கி உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர், தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏசி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ வரை, மகளிர் சுய உதவிக்குழுவினர், 25 கிலோ வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்ற சலுகையை அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது அரசுப் போக்குவரத்துக் கழகம்.

அதில், ” ஏசி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை 100 கி.மீ வரை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” வழங்க வேண்டும். சுய உதவிக்குழுவினர் கொண்டுவரும் சுமைகளை பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதற்காக, போதுமான நேரத்தை வழங்கி பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும். சுய உதவிக்குழு பெண் பயணிகளிடம் பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள், பேருந்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக உள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடாது,” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.