மாஸ்கோ: உலகின் பிரபல டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசில்லியன் டாலர் அபராதம் வித்துள்ளது. டெசில்லியனா கேள்விப்பட்டதே இல்லை.. எவ்வளவு தொகை கேட்கிறார்களா.. நம்பர் 2 போட்டு அதன் பிறகு 34 ஜீரோக்களை போட்டால் வரும் தொகை. இது ஒட்டுமொத்த உலக ஜிடிஜியை காட்டிலும் சுமார் 20 கோடி மடங்கு பெரிய தொகையாகும்.
கூகுள் மீது இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம். இந்த காலத்தில் உலகில் டெக் நிறுவனங்கள் மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. இப்போது பெரும்பாலான மக்கள் செய்திகளை மொபைல் மூலமே தெரிந்து கொள்ளும் நிலையில், இந்த டெக் நிறுவனங்கள் முக்கியமானதாக மாறியுள்ளன.
அபராதம்: அதன்படி உலகின் மிகப் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு இப்போது 20 டெசில்லியன் டாலரை ரஷ்யா அபராதமாக விதித்துள்ளது.
இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். உக்ரைன்- ரஷ்யா மோதல் பல ஆண்டுகளாகத் தொடர்வது அனைவருக்கும் தெரியும். தாங்கள் ஏன் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்பது உட்பட பல விளக்கங்களை ரஷ்யா தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த விளக்கங்களை முடக்க முடிவு செய்த யூடியூப் தளம், அதன்படி நடவடிக்கை எடுத்தது. இந்த விளக்கங்களை ஒளிபரப்பிய சேனல்கலையும் யூடியூப் தளம் முடக்கியது.
எவ்வளவு பெரிய தொகை: இதன் காரணமாகவே ரஷ்யா இந்த அபராதத்தை விதித்துள்ளது. யூடியூப் தளத்தின் தாய் நிறுவனமான கூகுளுக்கு இந்த அபராதத்தை ரஷ்யா விதித்து இருக்கிறது. இது தொடர்பான தகவல் வந்த போது பலரும் ஷாக் ஆனார்கள். ஏனென்றால் 20 டெசில்லியன் அபராதம் என்பதை எல்லாம் யாரும் கேள்விப்பட்டது கூட இல்லை. இது ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தை விட பெரியது.
ஆம் ஒட்டுமொத்த உலக ஜிடிபியை காட்டிலும் 19.9 கோடி பெரிய தொகையைக் கூகுளுக்கு அபராதமாக ரஷ்யா விதித்துள்ளது. அதேபோல இது அமெரிக்கப் பொருளாதாரத்தை விட சுமார் 78.5 கோடி மடங்கு பெரியதாகும். மேலும், நீங்கள் தினசரி 8.4 லட்சம் கோடி ரூபாய் என்று செலவு செய்தால் கூட இந்த தொகையைச் செலவு செய்து முடிக்க உங்களுக்கு 54 லட்சம் ஆண்டுகள் ஆகும்.
இரட்டிப்பாகும் அபராதம்: யூடியூப்பில் ரஷ்ய அரசின் சேனல்களை தடுப்பதன் மூலம் கூகுள் நிறுவனம் தங்கள் நாட்டின் தேசிய ஒளிபரப்பு விதிகளை மீறியதாக ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்து இந்த அபராதத்தை விதித்துள்ளது. மேலும், முடக்கப்பட்ட அனைத்து சேனல்கள் மீதான தடையை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்பது மாதத்திற்குள் அபராதத்தைக் கட்டி சேனல்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் அப்படித் தவறும்பட்சத்தில் ஒவ்வொரு நாளும் அபராதம் இரட்டிப்பாகும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022இல் இந்த விவகாரம் முதலில் வெடித்தது. அப்போது ரஷ்யாவின் அரசு சேனல்களான RT மற்றும் ஸ்புட்னிக் உட்படப் பல சேனல்களுக்கு யூடியூப் தடை விதித்தது. போர் விவகாரத்தில் தவறான கருத்துகளை வேண்டும் என்றே பரப்புவதாகக் கூறி இந்த சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டன. உலகெங்கும் உள்ள 1,000 சேனல்கள் முடக்கப்பட்டன. 15,000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டன. முதலில் இந்த தடை ஐரோப்பாவில் மட்டும் விதிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு உலகெங்கும் அமல்படுத்தப்பட்டது. அதற்குப் பதிலடியாகவே ரஷ்யா இப்போது இந்த அபராதத்தை விதித்துள்ளது.
அதேநேரம் கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா அபராதம் விதிப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே இரு ரஷ்ய அரசு சேனல்களை முடக்கி புகாரில் கடந்த 2020இல் கூகுள் நிறுவனத்திற்கு 100,000 ரூபிள் (சுமார் 1,028 டாலர்) ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்தது. சேனல்கள் மீதான தடையை நீக்கவில்லை என்றால் இந்த அபராதம் தினசரி இரட்டிப்பாகும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் கூகுள்: உக்ரைன் மோதல் தொடங்கிய போது பல மேற்குலக நாடுகள் ரஷ்யாவில் இருந்து மொத்தமாக வெளியேறின. கூகுள் நிறுவனமும் தனது செயல்பாட்டை பெருமளவு குறைத்துக் கொண்டன. இப்போது கூகுளின் சில சேவைகள் மட்டுமே ரஷ்யாவில் கிடைக்கும். ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் ரஷ்யத் துணை நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை அந்நாட்டு அரசு முடக்கிய நிலையில், அது திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.