மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
அப்போது மேற்கு வங்க மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘இந்த வழக்கில் நேரலை செய்யப்படுவதால் வழக்கு குறித்த பல்வேறு விவகாரங்கள் திரித்துக் கூறப்படுகிறது. குறிப்பாக நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் பற்றியும், தன்னைப் பற்றியும் தவறான சமூக வலைதளப் பதிவுகள் பரவுகிறது.
மேலும் வழக்கு தொடர்பாக ஆஜராகும் பெண் வழக்கறிஞர்கள் பலருக்கும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் நேரலை என்பது பொதுமக்களின் உரிமை ஆகும். விசாரணையை நேரலை செய்வதை நிறுத்த முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்?.விசாரணை எந்த அளவில் நடந்தது போன்ற பல்வேறு கேள்விகளை நாங்கள் சிபிஐ அமைப்பிடம் முன்னதாக கேட்டிருந்தோம். இவை அனைத்திற்கும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை அறிக்கையில் பதில் கிடைத்துள்ளது.
மேலும் பெண் மருத்துவர் மரணம் தொடர்பான விவகாரத்த்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சியாகவும், கண் கலங்கும் விதமாகவும் உள்ளது. அதன் விவரங்களை வெளியிட்டால் விசாரணையின் போக்கு பாதிக்கும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களை நாங்கள் வழங்க உத்தரவிட்டிருந்தோம். ஆனால் அதனை கொல்கத்தா காவல்துறை முழுமையாக இன்னமும் சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை.
அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கொல்கத்தா காவல்துறை, சிபிஐ விசாரணை அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்த்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட கபில் சிபல், ‘‘ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை இருக்கும் முழு வீடியோ காட்சிகளையும் நாங்கள் வழங்கி விட்டோம், சிபிஐ இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுகிறது என்ரு தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதிகாரிகள் இடமாற்றம்: கொல்கத்தாவில் போராட்டம் நடத்திய ஜூனியர் டாக்டர்கள் – முதல்வர் மம்தா இடையில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போலீஸ் கமிஷனர், 2 சுகாதாரத்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.