புதுடெல்லி: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் 471 நாட்கள் சிறை வாழ்க்கைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த செந்தில் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “15 மாதங்களுக்கு மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
25 லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணை தொகை 4 மற்றும் அதற்கு இணையான இரு பிணையதாரரின் பிணையை வழங்க வேண்டும். இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவார். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.