டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். பிரதமரிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளிக்க உள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான ஒன்றிய அரசின் பங்கு ரூ.7,425 கோடியை வழங்கவும் வலியுறுத்த உள்ளார். மீனவர்கள் கைது விவகாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்த உள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடையை பரிசளித்தார்.
சென்னையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்கு திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டி ஆர் பாலு, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், திருச்சி சிவா, தயாநிதிமாறன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார்.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதலமைச்சர் பிரதமரிடம் அளிக்க உள்ளார். குறிப்பாக அதில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டப்பணிகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த உள்ளார். மேலும் சமக்ர சிக்ஷா அபியான் என்னும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 573 கோடியை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கிறார்.
தமிழ்நாட்டிற்கான வரி நிலுவைகள், வெள்ள பாதிப்புகளுக்கான நிவார நிதிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று இந்த பயணத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.