பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக 20 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். அவர் 1.85 மீட்டர் உயரம் தாண்டி அசத்தியுள்ளார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வெற்ற சாதனையை மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். 2016-ல் தங்கமும், டோக்கியோ 2020-ல் வெள்ளியும், பாரிஸ் 2024-ல் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;
பிரதமர் மோடி வாழ்த்து:
“ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது. அவரது திறமை, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது.” இவ்வாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
“மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!
தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்!” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.