வங்கதேசத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டின் கீழ் ஹசீனா உட்பட 9 பேர் மீது வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் விசாரணையை தொடங்கியது.
தீர்ப்பாயத்தின் தலைமை வக்கீல் தாஜூல் இஸ்லாம் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ தீர்ப்பாயம் மீண்டும் கூடும் போது, ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க வலியுறுத்துவோம். அதைத் தொடர்ந்து அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்தி வங்கதேசம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.