சிகாகோ: ‘அதிபராக கமலா ஹாரிசுடன் புதிய அத்தியாயம் எழுத அமெரிக்கா தயாராகி விட்டது’ என முன்னாள் அதிபர் பராக் ஒபாமாக பிரசாரம் செய்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது.
இதில், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், சிகாகோவில் நடக்கும் ஜனநாயகக் கட்சியின்
தேசிய மாநாட்டில் நேற்று முன்தினம், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கமலா ஹாரிசை ஆதரித்து பேசியதாவது: பெரும் ஆபத்து தருணத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த அதிபராக ஜோ பைடனை வரலாறு நினைவு கூறும். அவரை எனது அதிபராகவும், நண்பர் என்றும் கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்போது ஜோதி கைமாறிவிட்டது. புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்கா தயாராகிவிட்டது.
சிறந்த வரலாறு படைக்க தயாராகி உள்ளது. அதிபர் கமலா ஹாரிசுக்காக நாங்கள் தயாராக உள்ளோம். கமலா ஹாரிசும் அதிபராக பொறுப்பேற்க தயாராகி விட்டார். இதில் எந்த தவறும் செய்யாதீர்கள். இனியும் கொந்தளிப்பும், குழப்பமும் நிறைந்த இன்னொரு நான்காண்டு நமக்கு தேவையில்லை. அந்த படத்தை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்.
அதன் தொடர்ச்சி மிகவும் மோசமானது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். இப்போது டிரம்ப், கமலா ஹாரிசிடம் தோற்றுவிடுவோம் என்கிற பயத்தில் இருக்கிறார். அதனால் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அமெரிக்கர்கள், புலம்பெயர்ந்தோர் இடையே பிரிவினையை தூண்டுகிறார். இது பழைய அரசியல் தந்திரம். இதில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.