விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, நேற்று காலை 11.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வக்பு வாரிய திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய தாக்குதலாக அமையும். பாஜ அரசு, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையோருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு, ஒற்றுமைக்கு எதிராக போய் முடியும்.
தேசிய ஜனநாயக கூட்டணி, 2026ல் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறுவது, வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் வரும் என்ற எண்ணத்தில் சொல்லி இருப்பார். தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது, அவருக்கே தெரியும். தமிழ்நாட்டில் உள்ள பாஜ, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் இதுவரையில் உறுதியான நிலைப்பாடு எதுவும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. அதிமுக, பாஜ கட்சிகள் இதுவரையில் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
அண்மையில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசும்போது, தமிழ்நாட்டில் அதிமுக, பாஜ இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. நான்தான் இரண்டாவது பெரிய கட்சி என்று பேசி இருக்கிறார். எனவே அதிமுக, பாஜ, தவெக கட்சிகளிடையே, இரண்டாவது இடம் யாருக்கு என்பதுதான், இப்போது தமிழ்நாட்டில் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறுவது, நகைச்சுவையாக இருக்கிறது. இந்தி திணிப்பை வட இந்திய மாநில மக்கள் கவனிக்காமல் இருந்து விட்டனர். இதனால் வட இந்தியாவில் பூர்வீக குடிமக்கள் பேசிய பல மொழிகள் அழிந்து விட்டன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில், தங்கள் தாய்மொழி, இந்தி மொழியால், அழிக்கப்பட்டு விட்டது என்று, சட்டமன்றத்திலேயே பேசும் அளவு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தமிழ்நாடு தான் ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்பதை, இப்போது வட இந்திய மாநில மக்கள் புரியத் தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை. அதற்கு நீண்ட காலம் உள்ளது. திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுக பலவீனப்படும் போது தான், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை வலுவாக மாறும். பாஜ, அதிமுக அரசியலுக்காக வலிந்து ஏற்படுத்தும் கூட்டணியே தவிர, அது கொள்கை அடிப்படையில் ஏற்படும் கூட்டணி அல்ல. எனவே அந்தக் கூட்டணி பொருந்தா கூட்டணி. அதனால் அவர்களால் தொடர்ந்து கூட்டணியில் பயணிக்க முடியவில்லை. திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையேயான நடவடிக்கைகளில் முரண்பாடுகள் இருக்கலாம். அவ்வப்போது கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படையான கொள்கைகளில் அனைவருக்கும் ஒருமித்த பார்வை இருக்கிறது, ஒரே நேர்கோட்டில் இருக்கிறோம்.