வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, எக்ஸ் தளத்தில் இருந்து 1.15 லட்சம் பயனர்கள் வெளியேறியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவருக்கு தேர்தலில் தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்தனர். எலான் மஸ்க் பெரிய அளவில் தேர்தல் நிதியும் வழங்கினார். அவருக்கு ஆதரவாக பல்வேறு விதமான பிரசாரத்தையும் வெளிப்படையாக மேற்கொண்டார். டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை தலைமை பதவியை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 லட்சம் புதிய பயனர்கள் வந்ததையடுத்து, ப்ளூஸ்கை தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக அதிகரித்துள்ளது. பிரபல செய்தி நிறுவனமான ‘தி கார்டியன்’ அதிபர் தேர்தலில் மஸ்க்கின் தலையீட்டுக்கு கவலை தெரிவித்து, எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்தின் 80க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கிலிருந்து பதிவிட போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க், கடந்த 2022ம் ஆண்டு வாங்கிய பிறகு அதிகளவிலான பயனர்கள் வெளியேறியது இதுவே முதல்முறையாகும்.