பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடியும் ஒருவர். அதிமுகவின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலாளராக இருந்த மலர்க்கொடி தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2001-ம் ஆண்டு கொல்லப்பட்ட கணவர் தோட்டம் சேகர் படுகொலைக்கு 20 ஆண்டுகள் கழித்து மகன்கள் மூலம் பழிதீர்த்தவர்தான் மலர்க்கொடி என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேநேரத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் தொடருகின்றன.
திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் என கைது நடவடிக்கைகள் தொடருகின்றன. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாஜகவின் ‘கஞ்சா’ அஞ்சலைக்கும் போலீசார் வலைவிரித்துள்ளனர்.