குற்றச்சாட்டுகள் கூறப்படாத ஒரு நபரை எத்தனை காலம் சிறையில் அடைக்க முடியும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சுரங்க நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகலின் முன்னாள் செயலாளர் சவுமியா சவுராஷியாவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாத ஒருவரை எவ்வளவு காலம் சிறையில் அடைக்க முடியும் என்பதை தங்களிடம் கூறுமாறு அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பண மோசடி வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்ற நிலையில், இது போன்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் விகிதம் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் சவுமியா ஏற்கனவே 1 ஆண்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், உரிய குற்றச்சாட்டுகள் இன்றி ஒருவரை எத்தனை காலம் சிறையில் அடைக்க முடியும் என காட்டமாக கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை வழக்குகளில் குறைந்த அளவிலேயே தண்டனை நிறைவேற்று இருப்பதை சுட்டி காட்டிய அவர்கள், நாடாளுமன்ற தரவுகளின் வெறும் 41 பண மோசடி வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறினர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் வருட கணக்கில் சிறையில் வைக்க அமலாக்கத்துறை வலியுறுத்துவதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.