வாஷிங்டன்: அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ள டொனால்ட் டிரம்ப், ஒட்டுமொத்த உற்பத்தியையும் அமெரிக்கா பக்கம் இழுக்க உலக நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இறக்குமதி கார்களுக்கான 25 சதவீத வரி வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த வரி நிரந்தரமானதாக இருக்கும். இது மிகச்சிறந்த பலனை தரும்’’ என்றார். 25 சதவீத வரி மூலம் வரி வருவாய் ரூ.8.7 லட்சம் கோடி அதிகரிக்கும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது பல அமெரிக்க கார் நிறுவனங்கள் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்ளிட்ட இடங்களில் ஆலைகளை அமைத்து அங்கிருந்து கார்களை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. கனடா கொந்தளிப்பு: கனடா பிரதமர் மார்க் கார்னே அளித்த பேட்டியில், ‘‘இைத எங்கள் நாட்டின் மீதான நேரடி தாக்குதலாக இதை பார்க்கிறோம் ’’ என்றார்.