புதுடெல்லி: நகர்ப்புறங்களில் வீடற்ற நபர்களின் தங்குமிடம் மற்றும் அவர்களின் உரிமை ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஒன்றிய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய இலவசங்களால் மக்கள் வேலை செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இதில் அனைத்து பிரிவு மக்களையும் சமூகத்தின் முக்கியமானவர்களாக மாற்றி, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்க அனுமதிக்க வேண்டும்.
அதுதான் அரசு செய்யும் நல்ல செயலாகும். குறிப்பாக இலவச ரேஷன் மற்றும் நிதி உதவி ஆகியவற்றால் மக்கள் வேலைக்கு செல்ல விரும்பவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அவர்களுக்கு நிதி உட்பட அனைத்தும் இலவசமாக கிடைத்து விடுகிறது. அதனால் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது. இதில் குறிப்பாக மக்கள் மீதான அரசின் அக்கறையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விதமாக அனுமதிப்பது தானே நல்லதாகும். அதைவிடுத்து இலவசத்தை மட்டும் கொடுக்கும் அவர்களை ஒன்றுமே செய்யவிடாமல் இருப்பது என்பது சரியானது கிடையாது.
எனவே நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணி எவ்வளவு காலத்திற்குள் நடைமுறைக்கு வரும். அது எப்படி முடிக்கப்படும். அதனை சரிபார்க்கும் கோணங்கள் என்னென்ன ஆகியவை குறித்த விரிவான விவரங்களை ஆறு வாரத்தில் அறிக்கையாக ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.