தெஹ்ரான்: இஸ்லாமிய நாடான ஈரானில் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்கவுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள ஈரான் முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமிய நாடாகும். அங்கு இஸ்லாமிய சட்டங்களின்படியே ஆட்சி நடந்து வருகிறது. அங்கு உயர்மட்ட தலைவராக அலி ஹொசைனி கமேனி இருக்கிறார். ஈரான்: அங்கு பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அந்நாட்டு அரசு கடுமையாகச் செயல்படுத்தி வருகிறது.
அதேநேரம் சமீப காலமாக அங்குள்ள பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஹிஜாப் விதியை நீக்க வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன. இதற்கிடையே ஹிஜாப் விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மனநல சிகிச்சை மையத்தைத் திறக்கவுள்ளதாக ஈரான் அரசு சர்ச்சை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக ஹிஜாப் சிகிச்சை கிளினிக் நிறுவப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி கூறியிருப்பதாக தி கார்டியனின் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கிளினிக்குகள் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் சிகிச்சையை வழங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஈரான் அரசின் இந்த முடிவு அங்குள்ள பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஈரான் பத்திரிக்கையாளரான சிமா சபேட், இந்த நடவடிக்கையை வெட்கக்கேடானது என்று சாடியுள்ளார்.
ஈரான் நாட்டில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது ஆடைகளை அகற்றி போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்தே ஈரான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த மாணவி யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அந்த பெண் முதலில் ஹிஜாப் அணிந்து தான் இருந்தார் என்றும் அங்கிருந்த துணை ராணுவப் படையினர் அந்த பெண்ணின் ஆடைகளைக் கிழித்து அத்துமீறியுள்ளனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த பெண் இதுபோல போராட்டம் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய நாடான ஈரானில் கடந்த சில ஆண்டுகளாகவே ஹிஜாப் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முறையாக ஹிஜாப் அணியாத 22 வயதான பெண் மஹ்சா அமினி என்பவர் அந்நாட்டு போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து அங்கு நாடு முழுக்க மிக பெரியளவில் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.