காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிபதி அனில் குமாரை அவரது அறையில் சந்தித்த சில வக்கீல்கள் முன்னுரிமை அடிப்படையில் முன்ஜாமீன் வழக்கு ஒன்றை விசாரிக்க ஏற்க வேண்டுமென நேற்று காலை கோரிக்கை விடுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, பட்டியலின்படியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியதால் இருதரப்பில் வாக்குவாதம் ஏற்பட்டது.நிலைமை விபரீதமான நிலையில், போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு வந்த போலீஸ் படையினர், வக்கீல்களை விரட்டி அடித்தனர். தடியடி நடத்தியதில் 12க்கும் மேற்பட்ட வக்கீல்கள் காயமடைந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து காசியாபாத் போலீஸ் கமிஷனர் அஜய் குமார் மிஸ்ரா கூறுகையில், ‘‘நீதிபதியுடன் வாக்குவாதம் செய்த வக்கீல்கள், அவரை தாக்க முயன்றனர். இதனால் சரியான நேரத்தில் போலீசார் உள்ளே சென்று லேசான தடியடி நடத்தி வக்கீல்களை கலைத்தனர். வக்கீல்கள் புறக்காவல் நிலையத்துக்கு தீ வைத்துள்ளனர்’’ என்றார்.