அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலகாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக பிரமுகர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த திருநெல்வேலி சென்றிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று ஒரே விமானத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தனர். விமானத்திலிருந்து இறங்கி வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார்.
எங்களை தாக்கியதோடு, அதே நேரத்தில் அவர்களாகவே தலைமைக் கழகத்திற்குள் புகுந்து, அடியாட்களை வைத்து, தலைமைக் கழகத்தை அடித்து உடைத்து விட்டு, எங்கள் மீது பழி போட்டனர். இவைகள் அனைத்தும் காவல்துறையின் வீடியோ பதிவில் உள்ளது. கட்சியில் நான் இணைய வேண்டும் என்று கூறவில்லை. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றாக இணைய வேண்டும். இணைந்தால்தான் வெற்றி பெற முடியும், என்ற ஒரு சூழ்நிலை உருவாகும்.
அதைத்தான், நான் திரும்பத் திரும்ப கூறிவருகிறேன். ஆனால் அதிமுக வெற்றிபெறும் வாய்ப்பு எந்த காலத்திலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில், அவர்களுடைய நடவடிக்கைகள் உள்ளது. ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவேன் என்று அவர் கூறினார். ஆனால் அவர் தலைமைக்கு வந்த பின்பு, ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. எடப்பாடி பழனிசாமி அவராகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை. இல்லையேல் அவமரியாதையை சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.