சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையை மீண்டும் செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு மாவட்ட செயலாளரும், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு உள்ள முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே சமீப காலமாக மோதல் எழுந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது இருவருக்கும் வேட்பாளர் அறிவிப்பில் மோதல் ஏற்பட்டது. தன்னை கேட்காமல் திருப்பூர், ஈரோடு வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி, அறிவித்து விட்டதாக செங்கோட்டையன் கடும் கோபத்தில் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சார்பில் எடப்பாடிக்கு ஈரோட்டில் நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் மீண்டும் உருவானது. அப்போது முதல் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே செங்கோட்டையன் கூறுவதை தவிர்த்து வந்தார். மேலும் சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இந்த பரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. அப்போது கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனிடையே எடப்பாடியை புறக்கணித்துவிட்டு நேரடியாக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். இந்த நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் 2 வது முறையாக புறக்கணித்துள்ளார். இதன்மூலம் அதிமுக உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.