எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1952-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
உலக தாய்மொழி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்; எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.