டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். முதலமைச்சரை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, பஞ்சாப், இமாச்சல் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்தார். நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணித்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடத்தில் தனது பேச்சு நிறுத்தப்பட்டதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.எனக்கு முன்னால் பேசியவர்களுக்கு 10 -20 நிமிடங்கள் வரை பேச அனுமதி வழங்கப்பட்டது. மேற்கு வங்கத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று பேசும்போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து அவமதித்துவிட்டார்கள்.
மத்திய பட்ஜெட் ஒருதலைபட்சமாகவும் அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது; ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை பேசவிடாமல் தடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிய அரசு அவமதித்துள்ளது. என்னை பேச விடாமல் தடுத்தது நாட்டின் அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிப்பதாகும்,”இவ்வாறு தெரிவித்தார்.