ஒட்டவா: கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் அல்லது அதற்கு முன்பாக பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மார்க் கார்னே 85.9 சதவீத வாக்குகள் (சுமார் 1.52 லட்சம் ஓட்டு) பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் துணை பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலாண்ட் உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர்.
ஒட்டவாவில் தனது வெற்றி உரையில் மார்க் கார்னே பேசுகையில், ‘‘ கனடா ஒருபோதும் அமெரிக்காவின் ஒருபகுதியாக இருக்காது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நியாயமற்ற வரிகளை விதித்து கனேடிய குடும்பங்கள், தொழிலாளர்கள், வணிகங்களை நசுக்குகிறார். அவரை நாங்கள் வெற்றி பெற விடமாட்டோம். அமெரிக்கர்கள் எங்களுக்கு உரிய மரியாதை காட்டும் வரையிலும் அவர்களுக்கு எதிரான பழிக்குபழி வரிகள் நீடிக்கும்’’ என சூளுரைத்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு கனடா நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக கூறி வருகிறார். இந்நிலையில் புதிய பிரதமர் கார்னே இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் கார்னே முன்னதாக அளித்த பேட்டியில், ‘‘கனடா ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் வர்த்தக உறவை பன்முகப்படுத்த விரும்புகிறது. இந்தியா உடனான உறவை மீண்டும் வலுப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்றார்.