வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிபர் டிரம்ப் புதிய வரி விதிப்புக்கள் மூலமாக பேரழிவு தரும் புதிய வர்த்தக போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில் கனடா மற்றும் மெக்சிகோவிற்கு எதிரான அதிபர் டொனால்ட் டிரம்பின் 25 சதவீத வரிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் கனடாவின் எரிசக்தி பொருட்கள் 10 சதவீத இறக்குமதி வரிகளுக்கு உட்பட்டவை என்றும் அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. இதேபோல் பிப்ரவரி மாதம் சீன இறக்குமதி பொருட்கள் மீது அதிபர் டிரம்ப் விதித்த 10 சதவீத வரியானது 20 சதவீதமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 100பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு சீனா கூடுதலாக 15 சதவீத வரியை விதித்துள்ளது. இது வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று சீனாவின் சுங்க வரி ஆணையம் தெரிவித்துள்ளது.