வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. ஆரம்பத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, தற்போதைய அதிபர் ஜோ பைடன் எதிர்கொள்வார் என்ற நிலை மாறி, ஜோ பைடனே, துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அங்கீகரித்தார்.
இந்த நிலையில், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கருத்துக்கணிப்பின் முடிவில், மக்கள் ஆதரவில் கமலா ஹாரிஸ் 49 சதவிகிதமும், டொனால்ட் டிரம்ப் 47 சதவிகிதமாகவும் பதிவாகியிருக்கிறது. ‘நியூயார்க் டைம்ஸ்/சியானா கல்லூரி’ நடத்திய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 48 சதவிகிதமும், டிரம்ப் 47 சதவிகிதமும் இருக்கின்றனர்.
இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவின் அடிப்படையில், டிரம்ப்பின் வாக்கு சதவிகிதம் சரிவை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே கமலா ஹாரிஸ் தேர்தலைச் சந்திப்பதற்கான தேர்தல் நிதியும் பெருமளவு திரண்டிருப்பது அவருக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் கமலா ஹாரிசுக்கு கடந்த ஒரு வாரத்தில் 200 மில்லியன் அமெரிக்கன் டாலரை (இந்திய ரூபாயில் 16,74,03,40,000) திரட்டியுள்ளதாகவும், 1,70,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கமலா ஹாரிசுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று செய்தி வெளியாகி உள்ளது.