வாஷிங்டன்: அரசியல் ஆதாயத்திற்காக அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தப்படுவதாக டொனால்டு டிரம்ப் பேசியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸின் பெயரை அறிவிக்க ஜனநாயக கட்சி தயாராகி வரும் நிலையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
சிக்காகோ நகரில் கறுப்பினத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது கமலா ஹாரிஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்திய வம்சாவளி என மட்டுமே அறியப்பட்டு வந்த கமலா ஹாரிஸ் திடீரென கறுப்பின பெண்மணியாக சித்தரிக்கப்படுவதாக கூறி கமலா ஹாரிஸின் அடையாளத்தை விமர்சனம் செய்தார்.
இதனிடையே பிரச்சார கூட்டத்தில் டொனால்டு டிரம்பின் விமர்சனத்துக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதில் அளித்தார். பிரித்தாளும் கொள்கை உள்ளவர் பிறரை அவமதிக்கும் ஒருவரை பற்றி கவலைப்பட கூடாது என கூறினார். வெளிப்படையாக உண்மையை பேசும் தலைவரே அமெரிக்காவுக்கு தேவை என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக கமலா ஹாரிஸ் இன அடையாளத்தை மாற்றியதாக டிரம்ப் விமர்சித்ததற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஜமைக்கா பாரம்பரியத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்கு சேவையாற்றும் முதல் கறுப்பின ஆசிய அமெரிக்கர் என வெள்ளை மளிகை செய்தி தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.