கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யக்கோரி அதிமுக, பாமக, பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என பாமக வழக்கறிஞர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 18ஆம் அந்த பகுதியைச் சேர்ந்த பிரவீன், சுரேஷ், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் அங்கு கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு மேல் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் 65க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலருக்கு பார்வை பாதிப்பு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. உடல் நலனுக்கு கேடு விளைக்கும் மெத்தனால்லை தொழிற்சாலைகள் வாங்கி அவற்றை கள்ளச்சாராயத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டதும், அதனை வாங்கி குடித்தவர்கள் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றி இருக்கும் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து வடமாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசாரும் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக, பாமக, பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் போது, கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக் வாதிடப்பட்டது. ” மேலும், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாநில போலீஸ் தவிர்த்து, வேறு அமைப்பு விசாரித்தால் தான், முழுமையான நீதியை வழங்க முடியும் எனவும் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான சோதனை நடத்தப்பட்டு கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வரை கள்ளச்சாராய விற்பனையோ நடமாட்டமோ இல்லை என தமிழக அரசு வாதிட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
மேலும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.