நியுயார்க்: உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப் உள்ளிட்டவற்றில் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
கூகுள் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை செயல்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபாகர் ராகவன்(64) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடி யில் பட்டம் முடித்த பிரபாகர் ராகவன், கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியுள்ள பிரபாகர் ராகவன் கடந்த 2012-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார்.
கூகுள் கிளவுட், கூகுள் ஆப்ஸ் ஆகிய பிரிவுகளுக்குத் தலைமை தாங்கிய பிரபாகர், ஜி மெயில், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றையும் மேலாண்மை செய்துள்ளார். 2018-ம் ஆண்டு கூகுள் சர்ச் பிரிவுக்கு பிரபாகர் பொறுப்பேற்றார். மைக்ரோசாப்ட், ஓப்பன்ஏஐ ஆகியவற்றால் கூகுள் கடும் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், கூகுளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.