தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே நேற்று கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சம் c வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த ரமணியை நேற்று காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மதனை காவல்துறை கைது செய்தது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துடன், ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என நேற்று அறிவித்திருந்தார். மேலும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை ரமணி பெற்றோரிடம் அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.